அ.தி.மு.க பொதுச்செயலாளராக முன்னாள் தமிழக முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி தேர்வான பிறகு முதல் மாநாட்டை மதுரையில் நடத்துகிறார். இந்த மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், `ஓ.பி.எஸ்-ஸின் கோட்டை’ என வர்ணிக்கப்படும் தென் மாவட்டத்தில் நாளை நடக்கும் இந்த மாநாட்டில் கூட்டத்தைத் திரட்டிக் காண்பித்து, பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் திட்டம்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு நாளை கோலாகலமாக அரங்கேற உள்ளது.
சவுக்கு சங்கர்
இந்நிலையில், அ.தி.மு.க மாநாட்டுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேரில் வந்துள்ளார். மாநாடு நாளை நடக்கும் நிலையில், அவர் இன்றே மதுரை வந்துள்ளார். மேலும், மாநாடு நடக்கும் இடத்தையும், அமைப்பையும் பார்த்தார். அதைப் பற்றி பிரமித்தும் பேசியுள்ளார். செய்தியாளரிடம் சவுக்கு சங்கர் பேசுகையில், "நாளை நடைபெற உள்ள இந்த மாநாடு தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, அ.தி.மு.க வரலாற்றிலும் ஒரு முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன்.
3 ஆண்டுக்கு முன்னனர் அ.தி.மு.க என்கிற கட்சி இருக்குமா? உடைந்து விடுமா?, தேறாது, அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு, எடப்பாடி எல்லாம் ஒரு தலைவர் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். தற்போது அந்த குழப்பம் எல்லாம் நீக்கியுள்ளது. அ.தி.மு.க ஒன்றிணைந்து நடத்தும் இந்த கூட்டத்தைப் பற்றி அவர்களது தொண்டர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை பார்க்கவே நான் இங்கு வந்துளேன்.
எம்.ஜி.ஆர். மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரம், செல்வி ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய ஆளுமை, எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி ஆக தரைமட்டத்தில் இருந்து வந்தவர். மிகப்பெரிய திரை நட்சத்திரங்களின் இடத்தை ஒரு சாதாரண விவசாயி நிரப்ப முடியுமா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அதை அவர் கிட்டத்தட்ட நிரப்பிவிட்டார் என்பதைத் தான் இந்த மாநாடு நிரூபிக்கிறது.
அவருக்கு எதிராக பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் பல்வேறு தடைகளை போட்டார்கள். அவரை ஒரு சமூகத்திற்கான தலைவர் என்று முத்திரை குத்தினார்கள். அதையெல்லாம் உடைத்துவிட்டு, இன்றைக்கு அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் மற்றும் ஒரே தலைவர் தான்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கும் விதமாகவும் உள்ளது." என்று கூறினார்.