சென்னையில் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 5 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கு, தயவுசெய்து மக்களை ஏமாற்றாதீர்கள் என்று சவுக்கு சங்கர் எக்ஸ் பகக்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நேற்று முன்தினம் (24.03.2025) கழிவு நீரை ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியாளர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் உள்ளிட்ட பலவேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தனது வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதுடன் தனது தாயைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீதும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.
சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு சங்கர் தனக்கு வேண்டியவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்க என் மீது குற்றம் சாட்டுகிறார் என்று கூறினார்.
இந்நிலையில்,சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கு, தயவுசெய்து மக்களை ஏமாற்றாதீர்கள் என்று சவுக்கு சங்கர் எக்ஸ் பகக்தில் பதிவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில், செல்வா, கல்யாண், விஜய், பாரதி, தேவி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.