கரூர் காந்திகிராமத்தை பிரியாணி கடை உரிமையாளரிடம் ரூ. 7லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கரிடம் கரூர் போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்பவருடைய மகன் கிருஷ்ணனுக்கு 43 வயது ஆகிறது. இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜூன் 6ம் தேதி கரூர் டவுண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு எனக்கு சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். பின்னர் என்னிடம் அவர் ஆன்லைனில் முதலீடு செய்வது பற்றி கூறினார். அப்படி முதலீடு செய்வதால் அதிகமாக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மை என்று நம்பி ரூ.7 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு விக்னேஷ் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்பேரில், கரூர் டவுன் போலீசார் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரது கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், விக்னேஷ், சவுக்கு சங்கரின் இணையதளத்தில்தான் வேலை செய்து வந்ததாகவும், அப்போது பணிபுரிந்ததாகவும், கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் சேர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து சவுக்கு சங்கரிடம் விசாரிக்க சென்னை புழல் சிறையில் இருந்து கரூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் அழைத்து வந்தார்கள்.
அதன்பிறகு சவுக்கு சங்கரை நேற்று காலை கரூர் கிளைச்சிறையில் இருந்து அழைத்து வந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 நீதிபதி பரத்குமார் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி 4 நாட்கள் சவுக்கு சங்கரை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.