சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தி காவல்துறையினர் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்ததாகவும், அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 19ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது, நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் சிறையில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமை படுத்துவதாகவும் இதனை கண்டித்து அவர் சிறையில் இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் வழக்கறிஞர் கூறினார்.மேலும் சவுக்கு சங்கரை சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.