தமிழகம் முழுவதும் நடந்த ஏடிஎம் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளியை ஹரியானாவில், தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில், பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக இதுவரை 19 புகார்கள் வந்துள்ளன.
பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில், ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கும் போது, பணம் வெளியே வரும். அப்போது வெளியே வரும் பணத்தை எடுத்துக் கொண்டு, பணத்தை வெளிக் கொண்டு வரும் வாயில் பகுதியை மூட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
இது போன்ற இயந்திரங்களில் 20 வினாடிகளுக்கு மேல் பணத்தை எடுக்காவிட்டால், பணம் திரும்பவும் உள்ளே சென்று விடும். கொள்ளையர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு சில வினாடிகள் மூடவிடாமல் செய்வதால், வாடிக்கையாளர் பணத்தை எடுக்கவில்லை எனக் கருதி, இயந்திரம் வங்கியின் சர்வருக்கு தகவல் அனுப்பிவிடும். இதனால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படாது. இவ்வாறு எத்தனை முறை பணம் எடுத்தாலும் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கில் பணம் குறையாது.
இதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்த திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை. இதனால் இழப்பீடு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன. இந்த சம்பவத்தில் 4 கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் அதேபோன்ற நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியமேடு எஸ்பிஐ வங்கியின் கிளையின் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதற்காக தனிப்படை அமைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் ஹரியானா மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக முக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ஏடிஎம் கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து எஸ்பிஐ வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா என சோதனை மேற்கொள்ள வங்கி கிளைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil