எஸ்.பி.ஐ. கட் ஆஃப் மார்க் சர்ச்சை: பொதுப் பிரிவு இட ஒதுக்கீடு அபாயகரமானதா?

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை விட மிக குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது.

எ.பாலாஜி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் எழுத்தர் பணிக்காக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வு முடிவின்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை விட மிக குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக நீதி பேசும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டேல்கள், ஜாட்டுகள் என பல சாதிகள் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளன. ஜனநாயக அரசு என்பது அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்பின் அடிப்படையில் நடப்பதாக இருக்க வேண்டும். அதற்காக சமூக நிலையின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. ஆகிய பிரிவுகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. இதனால், இந்த பிரிவு மக்கள் இடஒதுக்கீடால் அவர்களுடைய வாழ்க்கை நிலையில் முன்னேறியிருக்கிறார்கள். இதனைப் பார்த்த, பொது பிரிவினர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை கேட்டு குரல் எழுப்பி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய பாஜக அரசு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது. அதற்காக உச்சபட்சமாக குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயித்தது. மத்திய அரசு பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன் வந்தபோதே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் எழுத்தர் பணிக்கான முதல் நிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு 28.5 மதிப்பெண்கள் கட் ஆஃப் மதிப்பெண் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பழங்குடியினர்களுக்கான கட் ஆஃப் 53.75 மதிப்பெண் என்றும் எஸ்.சி. மற்றும் பி.சி. மதிப்பினருக்கான கட் ஆஃப் 61.25 மதிப்பெண் எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமூக – பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவினர்களை விட பொதுப் பிரிவினர் மிகவும் குறைவாக கட் ஆஃப் 28.5 மதிப்பெண் என்பது மிகவும் பாரதூரமானது என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் கூறுகையில், “பொதுவாக இந்த இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூறிவந்த குற்றச்சாட்டு என்னவென்றால், இடஒதுக்கீட்டில் குறைவாக மதிப்பெண் எடுத்துவிட்டு வேலைக்கு வந்துவிட்டார்கள். அதனால், தான் அரசு உருப்படவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். அது உண்மை இல்லை. இப்போது, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்ணில் தகுதி பெற்றிருக்கிறார்கள். இந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அந்த வரையறையின்படி ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் ரூபாய் பெறுபவர்கள், 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், சென்னை போன்ற இடங்களில் 1000 சதுர அடி நிலம் வைத்திருப்பவர்கள் எப்படி ஏழைகளாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருக்க முடியும். இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி எழுத்தர் தேர்வில் இட ஒதுக்கீட்டு பொதுப்பிரிவினருக்கு 28.5 கட் ஆஃப் மதிப்பெண் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது குறித்து எஸ்.பி.ஐ. வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கையில், பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பித்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கான இடங்களை நிரப்புவதற்கு கட் ஆஃப் மதிப்பெண் குறைத்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். இது போன்ற ஒரு நடைமுறையை எஸ்.சி., எஸ்.டி, ஒ.பி.சி பிரிவினருக்கு கடைபிடிக்கவில்லை. மேலும், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி,சி பிரிவுகளுக்கு இடையே பொதுவாக ஓரிரு கட் ஆஃப் மதிப்பெண்கள்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால், இந்த பொதுப்பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஓர வஞ்சனையுடன் செயல்படுகிறது. இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி ஆனால், இது சமூக நீதி அல்ல. இதனை நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்க்கிறது” என்று கூறினார்.

இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி நம்மிடம் பேசுகையில், “முதலில் கட் ஆஃப் மதிப்பெண் என்பது பொதுப்பிரிவில் எவ்வளவு பேர் விண்ணப்பித்து எழுதினார்கள் என்பதைப் பொருத்து அமைகிறது. மேலும், இந்த கட் ஆஃப் மதிப்பெண் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமீபத்தில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுப்பிரிவினரிடையே இல்லை. அப்படியே தெரிந்திருந்தாலும், அதற்கான சான்றுகளை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் அதனால் நிறைய பேர் விண்ணப்பிக்காமல் போயிருக்கலாம். அதனால், இப்படி குறைவான கட் ஆஃப் மதிப்பெண் வந்திருக்கலாம். வரும் காலத்தில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படும்போது நிறைய பேர் விண்ணப்பிப்பார்கள். மேலும், இந்த பொதுப் பிரிவினருகான இடஒதுக்கீட்டால் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பு இல்லை. ஆனாலும், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இதனை வைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close