முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சர்வதேச சதித் தொடர்பு குறித்து சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு (Multi Disciplinary Monitoring Agency)விசாரணை நடத்தி வருகிறது
இதற்கிடையே, 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2018ல் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசு தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதம் செய்வதாக கூறியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரியும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு, ஆளுநர் பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் 7 பேர் விடுதலை வழக்கில் ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார்.கடந்த 30 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளதால் அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கான உத்தரவை உச்சநீதிமன்றமே பிறப்பிக்க வேண்டும். ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கினை ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். ஆனால் ஆளுநர் ஏன் இதுவரை முடிவெடுக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பிப்பட்டது.
மேலும், பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையது அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசு இனியும் தாமதிக்ககூடாது என தெரிவித்ததுடன் வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil