ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கும் வேதாந்தா குழுமம் பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெற்றிருந்தது. அதற்கு தடை கோரி தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவினை விசாரிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி உத்தரவிட்டது தமிழக அரசு. மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தனர்.
ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிர்வாகப் பணிகள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேதாந்தா நிறுவனம் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தீர்ப்பாயம் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலைக்குள் இருக்கும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தை இயக்கலாம் என்று அனுமதி அளித்தது.
ஆனால் எக்காரணம் கொண்டும் ஆலை செயல்படக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. நிர்வாகப் பிரிவினை இயக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
To read this article in English
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது மாநில அரசு. ஆனால் இந்த மனுவினை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு “இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று நிராகரித்தது. இந்த மனு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளது.