சென்னை கடற்கரை கடலில் 134 அடி உயர பேனா சிலை அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக.1) தள்ளுபடி செய்தது.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. மூத்த வழக்கறிஞர் பி வில்சனின் சமர்ப்பிப்புகளை ஏற்று, நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை நிராகரித்தது.
மேலும், இந்த மனு தகுதியற்றது என்று குறிப்பிட்டு, "சம்பந்தப்பட்ட அதிகாரிகளை" அணுக மனுதாரருக்கு சுதந்திரம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனுவில், மீனவர்கள் குறிப்பாக சென்னை மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தச் சிலை பாதிக்கும்; மெரினா கடற்கரையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை சேதப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த முடிவு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளை மீறுவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து அந்த மனுவில், “சென்னை நகரம் முழுவதும் நினைவிடம் கட்ட போதுமான நிலம் உள்ளது. ஆனால் கடலுக்குள் ஒரு நினைவுச்சின்னம் அமைப்பது மெரினா சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும்.
மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டுள்ள தேசிய மதிப்பீட்டின்படி, இந்தியக் கடற்கரையோரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், மெரினா கடற்கரையில் அதிகளவு மணல் குவிந்துள்ளது.
இது அதிக மணல் குவிப்புகளில் ஒன்றாகும்; ஆகவே இது மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“