யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று (ஆக.14) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவை, திருச்சி, நீலகிரி உள்பட பல இடங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவதூறு வழக்கு, கஞ்சா வழக்கு உள்பட அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரிய சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். அதுமட்டுமன்றி சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் 2-வதாக பதிவு செய்த குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“