முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக கவர்னர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம், கவர்னர் முன் இருப்பதால், இந்த விவகாரத்தில், தங்களால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், இவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சிறையில் உள்ள ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகல தமிழக அரசு, 2014ம் ஆண்டில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அப்பீல் மனு விசாரணையில் இருந்ததால், அதுமுடிந்தபின்பே. உறவினர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.