திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமானந்தம். இவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், தன் நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணத்தின் மூலம் பெயர் மாற்றம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், இந்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு கடந்த ஜூன் 10-ம் தேதி 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அவர் இதை பொருட்படுத்தாததால், அறிக்கை அளிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னும், ஆணையத்தின் நோட்டீசை கண்டுகொள்ளாமல் அறிக்கை அனுப்புவதை வேண்டுமென்றே தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட கோப்புகளுடன், அக்டோபர் 10-ம் தேதி ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, எஸ்.பி-க்கு 'சம்மன்' அனுப்பப்பட்டது. அன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நவம்பர் 30-ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பபட்டு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினமும் அவர் ஆஜராகவில்லை. அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக,
ஏ.டி.எஸ்.பி மாரிராஜனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தமிழக எஸ்.சி-எஸ்.டி ஆணைய சட்டம் 2021 பிரிவு 9-ன் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணனனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன், அவரை கைது செய்து, வரும் 28-ம் தேதி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு, தென் மண்டல ஐ.ஜி-க்கு உத்தரவிடப்படுகிறது.
இதற்காக ஜாமினில் வெளிவரக் கூடிய 'வாரண்ட்' பிறப்பிக்கப்படுகிறது. சரவணனிடருந்து அபராதத் தொகையை வசூலிக்க, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil