திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த காரிங்கராயன் பாளையத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த பட்டியலின பெண் உணவு சமைத்துள்ளார். இதை அறிந்த சிலர், தங்களது குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காமல், வேறு பள்ளியில் சேர்ப்பதாக கூறி மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்களிடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால், பெரும்பாலானோர் குழந்தைகளை அனுப்பிய நிலையில், சிலர் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. மீண்டும் இது போன்று யாராவது வந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் கூறுகையில், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் டி.சி-யை கொடுங்கள் என்று கேட்டார்கள். எங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்கிறோம் என்றார்கள். எனினும் அவர்கள் சமைப்பவரை மாற்றச் சொல்லவில்லை. தங்கள் குழந்தைகளின் சான்றிதழை தான் கேட்டார்கள். பின்னர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதன் பின் யாரும் வரவில்லை. மீண்டும் யாராவது வந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து, இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து தனக்கு தெரியாது என்று சமையல் செய்யும் பெண் தெரிவித்தார். எனினும் மேலும் பிரச்சனை வராமல் இருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil