குரூப் ஒன் தேர்வில் ஊழலா? ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குரூப் 1 தேர்வு ஊழல் புகார் வழக்கில் தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By: August 16, 2017, 7:06:52 PM

குரூப் 1 தேர்வில் ஊழல் நடந்துள்ளதாக கூறி தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள குரூப் 1 பதவிகளை நிரப்பும் வகையில் தேர்வு நடத்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ( 2016 ) ஜூலை மாதம் பிரதான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பூர்த்தி செய்யப்படாத விடைத்தாள்கள் நீக்கப்பட்டு, முறைகேடாக பூர்த்தி செய்யப்பட்ட வேறு விடைத்தாள்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி ஆவணங்களுடன் செய்தியை ஒளிபரப்பியது. இதையடுத்து, இந்த தேர்வை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தான் டி.என்.பி.எஸ்.சி பிரதான தேர்வை எழுதியதாகவும், ஆனால் தேர்ச்சி பெறவில்லை இதனையடுத்து தகவல் உரிமைச் சட்டத்தில் விடைத்தாள்களை வழங்கக் கோரிய போது வழங்க தேர்வாணையம் மறுத்த நிலையில், அவை எளிதாக மோசடியாளர்களிடம் கிடைக்கிறது. மேலும் இரண்டு நேர்முகத் தேர்வு நடத்த இருப்பதாக தெரிகிறது.

அப்படி தேர்வு நடந்தால், அது தன்னைப் போன்ற உண்மையான விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும், நேர்முகத் தேர்வு நடத்தி, முடிவுகள் வெளியிடவும், அதன் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும் என்றும், தேர்வை ரத்து செய்து வெளிப்படை தன்மையுடன் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது
தனியார் தொலைக்காட்சியையும், காவல்துறை ஆணையரையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், ஆஜராகி, கடந்த 7 முதல 11ம் தேதி வரை நேர்முக தேர்வுகள் நடைபெற்று முடிவுகளும் வெளியாகிவிட்டன.

அதே போல இந்த வழக்கு தொலைக்காட்சி செய்தியை அடிப்படையாக கொண்டு தொடரப்பட்டது. மேலும் தனியார் தொலைக்காட்சியிடம் உள்ள ஆவணம் உண்மையானது அல்ல என தெரிவித்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்களிடம் விடை தாள் குறித்த ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, ஒரு உண்மையான விடைத்தாள் தொலைக்காட்சியிடம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உண்மையான ஆவணம் எங்களிடம் உள்ளது என அரசும் கூறுகின்றீர்கள். எனவே எப்படி இரண்டு உண்மையான விடைத்தாள்கள் இருக்க முடியும் ? என கேள்வி எழுப்பினார். அதேபோல தனியார் தொலைக்காட்சியிடம் உள்ள ஆவணத்தையும் குறைத்து எடைபோட முடியாது எனவும் நீதிபதி கூறினார்.

மேலும் அரசிடம் மட்டும் உண்மையான ஆவணங்கள் உள்ளன, அரசு தவறே செய்யாது என கூற முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். எனவே இரண்டு தரப்பினரும் தங்களிடம் உள்ள விடைத்தாள் ஆவணத்தை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் குரூப் 1 பணியாளர்களை தேர்வு செய்ய தடைவிதிக்க வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பு ஆவணங் களை ஆய்வு செய்த பின்பு தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்க, சென்னை மாநகர காவல் ஆணையருக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு மீதான விசாரணையை 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Scam in group 1 examination madras high court ordered to submit documents

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X