Advertisment

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு

பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளிப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
scheduled caste 7 sub castes demand one common name, பட்டியல் பிரிவு, ஷியாம் கிருஷ்ணசாமி, எல் முருகன், பாஜக, கேஎஸ் அழகிரி, கொங்கு ஈஸ்வரன், தேவேந்திரகுல வேளாளர் பெயர் அரசாணை கோரிக்கை, shyam krishnasamy, l murugan, ks azhagiri, kongu easwaran, புதிய தமிழகம் கட்சி

scheduled caste 7 sub castes demand one common name, பட்டியல் பிரிவு, ஷியாம் கிருஷ்ணசாமி, எல் முருகன், பாஜக, கேஎஸ் அழகிரி, கொங்கு ஈஸ்வரன், தேவேந்திரகுல வேளாளர் பெயர் அரசாணை கோரிக்கை, shyam krishnasamy, l murugan, ks azhagiri, kongu easwaran, புதிய தமிழகம் கட்சி

பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்று இந்த சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அரசியல் இயக்கங்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், இந்த சாதிகளை பட்டியல் சாதிகள் தொகுப்பில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், மற்றும் இந்த சமூகங்களைச் சேர்ந்த இயக்கங்கள், அமைப்புகள், பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தங்கள் சமுகத்தை பட்டியல் சாதிகள் பிரிவில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் விளைவாக, தமிழக முதல்வர் பழனிசாமி, இந்த சமூகத்தின் கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.

ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு, அரசியல் கட்சியினர், அந்த சமூக அமைப்புகள், மக்கள் இடையே மனுக்களைப் பெற்று ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அவருடைய மகன் ஷியாம் கிருஷ்ணசாமி, மற்றும் அந்த சமூகங்களைச் சேர்ந்த அரசியல் இயக்கங்கள் தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள, பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் உள்ள 7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கு அரசாணை வெளியிட பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று அறிக்கை வெளியிட்டார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரச் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் நீண்ட நெடுங்காலமாக எழுப்பி வருகிறது.

அந்த சமுதாயத்தோடு காங்கிரஸ் கட்சியின் உறவு என்பது பின்னிப் பிணைந்த ஒன்றாகும். இன்று மட்டுமல்ல, நீண்ட நெடுங்காலமாகவே அவர்களது உரிமைகளுக்காக பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது.

2010 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் இதற்கான கோரிக்கையை முன்வைத்து உடனடியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்ற அன்றய தமிழக முதல்வர் கருணாநிதி, உடனடியாக நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்து, இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டார். நீதிபதி ஜனார்த்தனன் உடனடியாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினைச் சேர்ந்த பலதரப்பு அமைப்புகளைச் சந்தித்து, கலந்துபேசி, ஆதாரங்களை திரட்டி, ஆய்வு செய்து 'கோரிக்கை நியாயமானது, அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம்' என்று பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பித்தார் .

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான அரசாணையை தமிழக அரசால் பிறப்பிக்க முடியவில்லை. இந்நிலையில், 2011 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற முடியாமல் போனதால், ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.

ஆனால், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வைத்து அரசியல் செய்கிற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தங்களது சமுதாய கோரிக்கையை ஜெயலலிதா ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதிமுக கூட்டணியில் சேர்ந்துகொண்டார். அதை உறுதிப்படுத்துகிற வகையில் 2011 மதுரை, அம்பாசமுத்திரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 7 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் சமூகம் என அறிவிப்பேன்' என்று பகிரங்கமாக ஜெயலலிதா உறுதிமொழி அளித்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் முதல்வராகப் பணியாற்றிய ஆறாண்டு காலத்தில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டார். இதையொட்டி அதிமுக மீது தேவேந்திர குல சமுதாயத்தினரிடையே கடும் எதிர்ப்பு உருவானது.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றப் போவதாகக் கூறி 2012 இல் மதுரையில் பாஜக மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 2015 ஆகஸ்ட் மாதம் அமித் ஷா தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 2015 செப்டம்பரில் தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளை புதுடெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவதற்கு ஏற்பாடு செய்தது.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்கிற பாஜக தேவேந்திர குல வேளாளரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அரசியல் ஆதாயம் தேடுகிற போக்கிலேயே செயல்பட்டு வருகிறது.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அந்தச் சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டு கபட நாடகத்தைத் தொடங்கியிருக்கிறார். இதை அந்தச் சமுதாய மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோல நீதிபதி ஜனார்த்தனன் பரிந்துரையைக் கிடப்பில் போட்ட அதிமுக அரசு காலம் தாழ்த்துகிற நோக்கத்தோடு, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழுவை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை ஆறாண்டுகளாக நிறைவேற்றாத அதிமுக அரசு இக்குழுவை அமைத்து காலம் தாழ்த்தி கிடப்பில் போடுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே நீதிபதி பரிந்துரையைப் புறக்கணித்த அதிமுக அரசு புதிதாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இன்னொரு குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் உணர்வுகளை அதிமுக அரசு தொடர்ந்து புண்படுத்தி, புறக்கணித்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்குப் பல உதாரணங்களை கூறலாம்.

அந்த சமுதாய மக்களால் மிகவும் போற்றப்படுகின்ற சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிடவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2010 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தபால் தலையினை வெளியிட்டு அந்த சமுதாய மக்களுக்கு தேசிய அளவில் பெருமை சேர்த்தது.

எனவே, காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவினரையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டிய முடிவினை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்கப்படவில்லையெனில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறபோது, எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியைச் சார்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி இப்பிரச்சினையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எழுப்புவார்கள்.

இப்பிரச்சினைக்கு பிரதமர் மோடி உறுதியான ஆதரவைத் தெரிவிக்கவில்லையெனில் நாடாளுமன்ற வளாகத்திலேயே மகாத்மா காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே,  கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பட்டியல் பிரிவில் உள்ள 7 சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க ஆதரவு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  மேலும், தமிழகத்தில் சாதி கலவரங்களை உண்டாக்க பிஜேபி தமிழ் மாநில தலைவர் முருகன் முயற்சி செய்கிறார். சொந்தக் காசில் சூனியம் வைத்து கொள்வது போல ஆகும் என்று ஈஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கொங்கு ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் தமிழகம் தடுமாறி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாதி அரசியலை கையில் எடுத்திருக்கின்ற பிஜேபி தமிழ் மாநில தலைவர் முருகனை கண்டிக்கிறோம். குறிப்பிட்ட சில சமூக பிரிவுகளை ஒன்றிணைத்து பொதுவான ஒரு பெயரை கொடுப்பதற்கு பிஜேபி தமிழக தலைவர் முயற்சிக்கிறார் என்பது அவருடைய பத்திரிக்கை செய்தியில் இருந்து தெரிகிறது. இந்த பிரச்சனை சில ஆண்டுகளாக தமிழகத்தில் பேசப்பட்டு வருவதும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதும் எல்லோரும் அறிந்ததே. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்காமல் ஒரு சமூகத்திற்கு புது பெயர் வைக்க மத்தியிலே ஆள்கின்ற கட்சியினுடைய தமிழக தலைவர் முயற்சிப்பது பல்வேறு சாதி கலவரங்களை தமிழகத்தில் உருவாக்கும். அதன் மூலம் அரசியல் லாபத்தை அடைய பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தால் சொந்தக் காசில் சூனியம் வைத்து கொள்வது போல் ஆகும். குறிப்பிடப்படுகின்ற சமூக பிரிவுகள் இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றப்படுகின்ற நிலைமையும் ஏற்படும். அந்த சமூகங்களை சார்ந்த ஒரு சிலர் இந்த கோரிக்கை வைக்கிறார்கள் என்பதற்காக அந்த சமூகத்தை சார்ந்த அனைவருடைய கருத்துக்களையும் கேட்காமல் வாக்குவங்கிக்காக இதை செய்தால் அவர்களுக்குள்ளேயே கலவரங்கள் வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உண்மையான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தமிழக பாஜக தலைவர் களம் இறங்கியிருப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாக போகும். தமிழகத்தில் சிறிதளவு இருக்கின்ற வாக்குவங்கியும் பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு இந்த செயல்பாடுகள் வழிவகுக்கும். நாட்டை ஆள்கின்ற ஒரு தேசிய கட்சியினுடைய தலைவர் தமிழ் மண்ணில் சாதி கலவரங்கள் வரக்கூடாது என்று விரும்பினால் தன்னுடைய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் அரசாணைக்கு ஆதரவாக பிரதமரே பேசினார், முதலமைச்சர் தெரு தெருவாக பிரச்சாரம் செய்தார், திமுக தலைவர் ஆதரவு

காங்கிரஸ் ஆதரவு. ஆனால் கோரிக்கை இன்றும் வெறும் பேச்சளவில் மட்டுமே நிற்கிறது. தேவேந்திரர்களின் ஆதரவை பெற ஒரு அறிக்கை போதுமென்று கனவு காண வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court Siddha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment