காலதாமதமாக வந்ததால் ‘வாத்து நடை’ தண்டனையளித்த ஆசிரியர்: 10-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப மரணம் - தலைமை ஆசிரியர், உடல்கல்வி ஆசிரியர் கைது

காலதாமதமாக வந்ததால் மாணவர் ஒருவருக்கு வாத்து நடை தண்டனை அளித்ததால், அம்மாணவரின் உடல் அதற்கு ஒத்துழைக்காததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில், காலதாமதமாக வந்ததால் மாணவர் ஒருவருக்கு வாத்து நடை தண்டனை அளித்ததால், அம்மாணவரின் உடல் அதற்கு ஒத்துழைக்காததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,

பெரம்பூர் ஜமாலியாவை சேர்ந்த முரளி மற்றும் சித்ரபாவை தம்பதியரின் இரண்டாவது மகன் நரேந்திரன் (வயது 15). பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் நரேந்திரன் 10-வது வகுப்பு படித்து வந்தான்.

narenthar

நரேந்தர் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து புதன் கிழமை நரேந்திரன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில், பள்ளிக்கு சென்ற சிறிதுநேரத்தில் அவனது தந்தையை பள்ளியிலிருந்து தொடர்புகொண்டு, நரேந்திரன் இறைவணக்கக் கூட்டத்தில் மயங்கிவிழுந்துவிட்டதாகவும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு நரேந்திரனின் பெற்றோர்கள் சென்றபோது, அங்கு நரேந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலையில் இயல்பாக பள்ளிக்கு சென்ற மகன் இறந்துவிட்டதாக தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சக மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது, பள்ளிக்கு காலதாமதமாக வந்ததால், உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங், மாணவர் நரேந்திரன் உட்பட சில மாணவர்களுக்கு வாத்து நடை (Duck walk) தண்டனை அளித்ததாகவும், நரேந்திரனால் அத்தண்டனையை முழுமையாக முடிக்கும் அளவுக்கு உடல் நிலை இல்லாவிட்டாலும், ஆசிரியரின் மிரட்டலால் அதனை தொடர்ந்து மேற்கொண்டதாலேயே அவன் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நரேந்திரனின் பெற்றோர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இயற்கையான மரணம் என்றே உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவனின் உறவினரும் பொதுமக்களும் இன்று காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பகல் 11.30 மணி வரையில் போராட்டம் நீடித்து வருகிறது. மாணவர் மரணம் தொடர்பாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதும் மாணவனின் உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு தலைமை ஆசிரியர், தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் அருள்சாமி கைது செய்யப்பட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close