காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் ஊராட்சி அரசுப் பள்ளி தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே, நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதன்படி, தற்போது தலித் காலனியில் பள்ளி இருக்கும் இடத்திலேயே புதிய பள்ளிக் கட்டடத்தை கட்ட வேண்டும் என ஒரு பிரிவினரும், நபார்டு வங்கி நிதியின் மூலம் புதிய இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என மற்றொரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு 3 கோடியே 77 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், பள்ளிக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இதர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மாணவர்கள் நான்கு நாட்களுக்கும் மேல் பள்ளிக்கு அனுப்பப்படாமல் இருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கடந்த புதன்கிழமை சென்று ஆய்வு நடத்தி வியாழக்கிழமை முதல் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுறுத்தினார். இதையடுத்து, கடந்த வியாழன் அன்று, இவ்விவகாரத்தில் தீர்வு காண, ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், குரு தட்சிணாமூர்த்தி கோயில் இடம், தற்போது பள்ளி இருக்கும் இடம் ஆகிய இவ்விரு இடங்களில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், குரு தட்சிணாமூர்த்தி கோயில் இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை நிலம். பட்டாவும் பெற வேண்டும். அதேபோல், தற்போது பள்ளி இருக்கும் இடம் ஏற்கனவே நீர்நிலை புறம்போக்கு இடமாக உள்ளதால் அதிலும் பட்டா பெற சிக்கல் நீடிக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டடம் கட்ட மூன்றாவதாக ஒரு புதிய இடத்தை அரசு காட்டியுள்ளது. இந்த மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை, 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதற்குள் இரு பிரிவனருக்கும் பொதுவான இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட சம்மதம் தெரிவிக்க வேண்டும். மேலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, திங்கட்கிழமையில் இருந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம், நபார்டு நிதி எந்த வகையிலும் திரும்பிச் செல்வதற்கு முன்பே பள்ளிக் கட்டடத்தை கட்டிவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளோம் என ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.