தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் நடத்தும் 41-வது புத்தக கண்காட்சி நேற்று (புதன் கிழமை) துவங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) கடந்த 40 ஆண்டுகளாக புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில், 41-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நேற்று துவங்கியது. புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/IMG_1494-300x200.jpg)
பின்பு, சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது,
/tamil-ie/media/media_files/uploads/2018/01/IMG_1512-300x200.jpg)
”மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா, கன்னிமாரா நூலகத்தில் படிக்காத புத்தகங்களே இல்லை எனலாம். அதன்மூலம், எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்த்துக்கொண்ட அவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.
அதைபோலவே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின் தனி அறையில் மேற்கத்திய வரலாறு, அறிவியல் தொடர்பாக ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கும். அதன்மூலம், அவர் தன் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/IMG_1469-300x200.jpg)
அரசியல் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு புத்தகங்களே வழிகாட்டியாக இருந்திருக்கின்றன. ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை அறிய இத்தகைய புத்தக கண்காட்சிகள் முக்கியம்”, என கூறினார்.
மேலும், தமிழகத்தில் 191 முழுநேர நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 123 நூலகங்களிலும் அந்த வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/IMG_1474-300x200.jpg)
உள்ளாட்சி துறையிலிருந்து பொது நூலக துறைக்கு ரூ.168 கோடி வர வேண்டியுள்ளது. அதில், ரூ.25 கோடி விரைவில் கிடைக்கும். அதன்மூலம், புத்தகங்கள் பதிப்பாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. புத்தகங்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும் என கூறினார்.