கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியின் என்.சி.சி முகாமில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம். சரயு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, இந்த சம்பவத்தில் இதுவரைக்கும் 11 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். என்.சி.சி முகாம் என்று சொல்லி வெளியில் இருந்து ஆட்கள் வந்து இந்த மாதிரி முகாம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், என்.சி.சி-க்கும் இந்த முகாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு வந்த உடனே துரிதமாக செயல்பட்டு முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர்களை கைது செய்திருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், இந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலமாக அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு தேவையான கவுன்சலிங்கும் தேவையான ஆதரவும் நாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களையும் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான கவுன்சலிங் மற்றும் ஆதரவு எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
கல்வித்துறை மூலமாக நேற்றில் இருந்தே விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியைப் பொறுத்தவரைக்கும் தேவையான எல்லா அனுமதிகளையும் பெற்றிருக்கிறார்களா? இதற்கு முன்னால் அங்க இந்த மாதிரி முகாம் நடந்திருக்கிறதா? இதையெல்லாம் நாங்கள் விசாரித்து வருகிறோம்.
இந்த சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் புகார் வந்த உடனே யார் யார் இதில் ஈடுபட்டிருக்கிறார்களோ மற்றும் இந்த தகவல் வெளியே வந்த பிறகு, யாரெல்லாம் அதை மூடி மறைக்க முயற்சி செய்தார்களோ அவர்கள் அனைவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் நேற்று எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள், இன்று எத்தனை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, “இந்த சம்பவத்தில் நேற்று வரை 9 பேர் கைது செய்யப்பட்டார்கள். இன்று முக்கிய குற்றவாளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமனைப் போன்றவர்கள் மேற்கொண்டு 5 ஆசிரியர்கள் இதே போல முகாம்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, “நேற்றை விசாரணையில்தான் இந்த மாதிரி தகவல் வந்திருக்கிறது. எந்தெந்த பள்ளியில் இவர்கள் முகாம் நடத்தியிருக்கிறார்கள். அந்த பள்ளியில் யார் யார் கலந்துகொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமல்ல, வேற மாவட்டத்திலும் நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. சி.இ.ஓ மூலமாக அந்த விசாரணையும் போய்க்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, “கல்வித் துறையைப் பொறுத்தவரைக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் விரிவான அறிக்கை கேட்டிருக்கிறார்கள். அதற்காக, பள்ளிக் கல்வித்துறை மூலமாக விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். முன்னாடி சொன்ன மாதிரி, இதற்கு முன்னாடி இந்த பள்ளியில் ஏதாவது விதிமீறல் நடந்து இருக்கிறதா? முகாம் ஏற்பாட்டாளர், அவருடைய பின்னணி, யார் யார் உள்ள வந்திருக்கிறார்கள், மாணவர்களை வைத்து முகாம் நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா என்பதை எல்லாம் விரிவாக பள்ளிக் கல்வித்துறை மூலம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த முகாமுக்கு என்.சி.சி எந்த அனுமதியும் அளிக்கவில்லை, இந்த முகாமுக்கும் என்.சி.சி-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாநில என்.சி.சி நிர்வாகம் விளக்கம் அளித்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.