வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வகுப்புக்கு செல்லாததை கண்டிக்காததால் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்தியதாக, 11-ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் ரயில் நிலைய சாலையில் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எனும் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக பாபு (52) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திங்கள் கிழமை காலையில் பள்ளி வழக்கம்போல் துவங்கிய நிலையில், தலைமை ஆசிரியர் பாபு பள்ளி முழுவதையும் பார்வையிட்டு கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளியின் மேல்தளத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் சில மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாணவனையும் கண்டித்து வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.
கடைசியாக பிளஸ் 1 படிக்கும் மானாவன் ஒருவனையும் கண்டித்து வகுப்புக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, அந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், தலைமை ஆசிரியர் பாபுவின் வயிறு, முகத்தில், குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதனால், வலியால் துடித்த பாபுவின் அலறல் சத்தத்தைக் கேட்ட சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அன்றிரவு அந்த 11-ஆம் வகுப்பு போலீசில் சரணடைந்ததையடுத்து, போலீசார் அவனை கைது செய்தனர்.
ஏற்கனவே, கடந்தாண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர் ஒருவர், தலைமை ஆசிரியர் பாபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதனால், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.