திருச்சியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, பள்ளிகளின் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்தல், பெற்றோர் சமூகம் பங்கேற்பை உறுதிசெய்தல், பள்ளி சமூகம் ஒருங்கிணைத்து செயல்பட தூண்டுதல், பள்ளிகள் மீதான கண்காணிப்பை உறுதிசெய்தல், உள்ளுர் வளங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேலாண்மை செய்யும் நோக்கத்தில் இந்த பள்ளிமேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றல், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வழிகல்வி படிப்பதற்கும், தோல்வி அடைந்தமாணவர்களுக்குத் தொடர்ந்து தேர்ச்சிப் பெற தலைமையாசிரியருடன் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாட்டில் பள்ளியின் மேம்பாட்டிற்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், சிறப்பாக தொடந்து செயல்பட்டு வரும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் அன்புசேகரன் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“