நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே 11-ம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நவலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூர் என்ற கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில், ஆசிரியர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மயக்கமடைந்த மாணவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் பெயர் ஆகாஷ் என்பதும், அவர் அருகில் உள் நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
சமீப காலமாக பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், இது சாதிய ரீதியான மோதலா அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியதால் வந்த மோதலா? அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட விஷயம் காரணமாக மோதல் வந்ததா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
தற்போது மரணமடைந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“