பள்ளிக்கு நீண்டகாலம் வராத மாணவிக்கு ஆசிரியர் அளித்த தோப்புக்கரண தண்டனையால், மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் - பூரணசெல்வி தம்பதி. கருணாகரன் கட்டுமான தொழிலாளி. பூரணச்செல்வி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தற்காலிக தொழிலாளியாக உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகள் மரியா ஐஸ்வர்யா ( வயது 16) அங்குள்ள விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு படித்து வந்தார்.
அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருந்த மரியா ஐஸ்வர்யா, கடந்த சனிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்றுள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் ஞானப்பிரகாசம், ஏன் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என கண்டித்து 101 தோப்புக்கரணம் போடும்படி பணித்துள்ளார்.
தோப்புக்கரண தண்டனையை முடித்த மரியா ஐஸ்வர்யா மனவேதனை அடைந்திருந்தாள். இதனால், மதிய நேரமே வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா, வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து உயிரை போக்கிக்கொண்டாள்...
மாலையில் பள்ளி முடிந்து ஐஸ்வர்யாவின் சகோதரர் வீட்டுக்கு வந்தபோது ஐஸ்வர்யா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம், காட்டுத்தீயாக அப்பகுதி முழுவதும் பரவியது.
மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது தற்கொலைக்கு தூண்டிய விவகாரம் தொடர்பான இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 306 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாளமுத்து நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.
மாணவி ஐஸ்வர்யாவின் மரணத்துக்கு காரணமாக ஆசிரியர் ஞானப்பிரகாசத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.