கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவிப்பது தொடர்பான விவகாரத்தில், 3 வெளிமாநில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்து, ’தமிழ்நாட்டில் கூல் லிப் போதைப்பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரி பல மனுக்கள் தாக்கலாகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகியுள்ளது தெரிய வருகிறது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற பொருட்களுக்கு தடை இருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அங்கு இவற்றை தயாரிப்போரிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம்போல் செயல்பட தொடங்கி விடுகிறது.
போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது போன்ற எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும்.
ஆகவே கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று செப். 20க்குள் தெரிவிக்க வேண்டும்’, என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில், ஹரியானா மாநிலம், சோனேபேட் பகுதியைச் சேர்ந்த தேஜ்ராம் தரம்பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநிலம் தும்குரு அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியாவை சேர்ந்த வி.ஆர்.ஜி ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர், என்றார்.
மேலும் இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் போது அவர்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“