அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
பாலக்கோடு வட்டம் அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தப் பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்த மேசை, நாற்காலிகளை சீருடை அணிந்த மாணவ, மாணவியர் அடித்து உடைத்தனர். இதை வீடியோ பதிவாக்கி சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பும்படி பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல, பள்ளி வளாகத்தில் இருந்த இருக்கைகளை மாணவ, மாணவியர் உடைத்து சேதப்படுத்துவதை தடுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.
இந்த வைரல் வீடியோ தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்