பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் சண்டையில் ஈடுபட்டனர். சண்டையிட்ட மாணவர்களுக்கு காவல்துறையினர் அளித்த புதுமையான தண்டனை பொது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் இரண்டு வெவ்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10,11,12 வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டனர். இதனால், வ.உ.சி மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கே விரைந்து சென்று மணவர்களைப் பிடித்து கண்டித்தனர். பின்னர், சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் அவர்களுடைய பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பள்ளிக்கூடம் படிக்கிற மாணவர்கள் இப்படி சண்டையிடலாமா என்று கண்டித்த போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அதோடு, சண்டையிட்ட மாணவர்களுக்கு 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்று தண்டணை வழங்கினர்.
மாணவர்களும் காவல் நிலையம் முன்பு அமர்ந்து புத்தகத்தைப் பார்த்து 1330 திருக்குறளையும் எழுதிக்கொடுத்துவிட்டு இனிமேல் சண்டையிடமாட்டோம் என்று உறுதியளித்தனர்.
திருவள்ளுவர் சிலையை மையமாக வைத்து தமிழக அரசியலில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் சண்டையிட்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை வழங்கிய இந்த தண்டனை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அண்மையில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பலரையும் பதற்றமடையச் செய்தது.