கோயம்புத்தூரில் 3 பள்ளி மாணவர்களால், 5 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம், இந்த பள்ளியில் ஆரம்ப சுகாதாரம் சார்பில் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 5 பேருக்கு சிறுநீர் கழிப்பத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.
உடனே, அந்த மாணவிகளை மருத்துவர்கள், தனியாக அழைத்து பரிசோதனை செய்தனர். இதில் திடுக்கிடும் பல தகவல்களை மாணவிகள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுக் குறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடமும் மறைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அந்த 5 மாணவிகளில் ஒருவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த மாணவி தொடர்ந்து பள்ளிக்கு வரமால் விடுமுறையும் எடுத்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களால் மாணவிகளின் பெற்றோர்கள் கொடூரச் செயலில் ஈடுப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். இருந்தபோது, குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அந்த மாணவர்கள் மீது பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், தனக்கு நேர்ந்தது பாலியல் வன்கொடுமை தான் என்பதை அறியாத அந்த மாணவிகள், இதை ஒரு விளையாட்டு என நினைத்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல், இந்த விளையாட்டு குறித்து நீங்கள் வெளியில் சொன்னால், உங்களை இந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அந்த மாணவர்கள் இந்த இளம் தளிர்களை ஏமாற்றி உள்ளனர்.
படிக்கின்ற வயதில், மாணவர்கள் இதுப் போன்ற கொடூர செயலில் ஈடுப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சமூகமும், சினிமாவும் இளைய தலைமுறையினர் மனதில் என்ன விதையை தூவி செல்கின்றது என்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.