தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மற்றும் வால்பாறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் மற்றும் கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 14.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சஜன் சிங் சவன் உத்தரவிட்டுள்ளார்.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 742 கன அடியில் இருந்து 1,932 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.