Rain in Tamilnadu: தமிழகத்தில் பெய்யும் கனமழை காரணமாக நாகை, திருவாரூர், சேலம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான பருவமழை தமிழகம் முழுவதும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், சேலம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை :
கனமழை காரணத்தால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சேலம் :
சேலத்தில் இன்று அதிகாலை முதல் லேசாக பெய்யத்தொடங்கிய மழையானது, கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. சேலம் பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கோரிமேடு, புதிய பேருந்து நிலையம், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கியது. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் :
கடலூரில் மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் மழை கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி, வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் காலை வரை மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் :
திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக தொடர்ந்து விட்டு விட்டு கன மற்றும் மிதமான மழை பெய்துவருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடரும் மழையால் குளங்களில் தண்ணீர் தேங்கிவருகின்றது. திருவாரூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் 5-ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் :
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், அபிராமம், பேரையூர், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. கண்மாய், ஊருணி, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்புவதால் வேளாண் பணிகளில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், துறைமங்களம், நான்கு ரோடு, குன்னம், வேப்பூர், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, அம்மாபாளையம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்காநத்தம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், திருவாலங்காடு, மணவூர், கே.ஜி.கண்டிகை, கோரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில், பலத்த மழை பெய்தது. பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுச்சேரி :
புதுச்சேரி மாநிலத்தில் இரவு பெய்யத் தொடங்கிய மழை காலை வரை தொடர்ந்து பெய்தது. வில்லியனூர், திருபுவனை, அரியாங்குப்பம், கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, கோமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. மிஷன் வீதியில் பள்ளி அருகே பலத்த காற்றில் மரம் விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.