இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. புதிய வகுப்பிற்கு செல்லும் உற்சாகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு ஆவலுடன் செல்வதை பார்க்கமுடிந்தது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு. தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளின் காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்படலாம் என தொடர்ந்து தகவல்கள் பரவிவந்தன. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் கல்விநலனை கருதி, திட்டமிட்டபடி, பள்ளிகள் ஜூன் 3ம் தேதி அன்றே திறக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, கிட்டத்தட்ட 2 மாதங்கள் விடுமுறைக்கு பின், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பெரும்பாலான பள்ளிகள் இன்று புதிய கல்வியாண்டை துவக்கின.
புதிய பாடபுத்தகங்கள் வெளியீடு : 2,3,4,5,7,8,10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடபுத்தகங்கள் வெளியீடு. சென்னை தலைமை செயலகத்தில், புதிய பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன். எந்த தேர்வாக இருந்தாலும் மாணவர்கள் சந்திக்கும் வகையில் புதிய பாடதிட்டங்கள் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பழைய பஸ்பாஸிலேயே பயணம் : மாணவர்களுக்கு, புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும் வரை, அவர் பழைய பஸ் பாஸிலேயே பயணிக்க தமிழக போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
புதிய சீருடை, பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.