/indian-express-tamil/media/media_files/2025/06/02/fARgw36Cj5WUOUPDypNg.jpeg)
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்!
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 2-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் காலையே பரபரப்பாக பள்ளிகளுக்கு செல்ல தயாரானார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு 'செல்ல அடி' கொடுத்து பெற்றோர் எழுப்பி ஆயத்தப்படுத்தினார்கள்.
சலிப்புடன் வந்த மாணவர்கள், பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்து பள்ளிகளிலும் இன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.
கோவையில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிக்கி மவுஸ், டெடி பியர் போன்ற பொம்மைகள் வேடமிட்டு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவிகளை வரவேற்கும் பொருட்டு இதய வடிவிலான பதாக்களில் வாருங்கள் என கை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2025-26ஐ பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.
இதேபோல, புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின்பு அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் உற்சாகமா பள்ளிக்கு வந்தனர். வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே துவங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை சற்று குறைவாகவே காணப்பட்டது. எனவே, திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.