/tamil-ie/media/media_files/uploads/2022/11/K-Sivan.jpg)
கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கலந்துகொண்டு பட்டம் அளித்தார்.
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் ஆலோசகருமான கே.சிவன் கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்கிணற்று பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்து விட்டன.
கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்படவேண்டும். செயற்கைக் கோள் செலுத்தும் போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க திட்டம் உள்ளது.
தமிழக அரசு இதற்கான நிலத்தை வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள மீன் பிடி தொழிலாளர்களுக்கு,நேவிக்கருவி விரைவில் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும்.
சந்திராயன் 2 திட்டம் புதிய தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் தோல்வியால் கிடைத்த அனுபவத்தில் அடுத்த மிஷனில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி4 என்ற 54ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் வருகிற 26ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட உள்ளது.
அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட உள்ளன. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தயாராகி வருகிறது.
அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் இல்லாமல் லிபரோஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கை கோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. அது சூரியனை ஆய்வு செய்யும்” எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.