தற்பாலின ஈர்ப்பு ஆண்களால் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவுகிறது என்ற அதிர்ச்சிகர தகவலை ஆய்வாளரும், விஞ்ஞானியுமான பச்சைமுத்து பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்கினர். அத்துடன் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பலூன்களை பறக்கவிட்டு எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் விஞ்ஞானி பச்சைமுத்து பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “முன்பெல்லாம் பாலியல் தொழிலாளர்கள் தான் வளரும் நாடுகளில் எய்ட்ஸ் நோய் பரவ முக்கிய காரணமாக இருந்தனர். தற்போது போதை ஊசிகளை பகிர்ந்துகொள்பவர்கள் மூலம் எய்ட்ஸ் பரவுகிறது.
20 வருடங்களுக்கு முன்னர் மேல்நாடுகளில் ஆண் தற்பாலின ஈர்ப்பாளர்கள் அதிகம் இருந்தனர். அப்போது இந்தியாவில் அதுபற்றி பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால், தற்போது இந்தியாவில் குறிப்பாக சென்னை, நீலகிரியில் அதிகமான ஆண் தற்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளனர்.
அவர்கள் மூலம் எய்ட்ஸ் வேகமாக தமிழகத்தில் பரவுகிறது. 20 வருடங்களுக்கு முன்னர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்து கிடையாது. மேல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் ரூபாய் 20 ஆயிரம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது வெறும் 600 ரூபாயில் அதிக பயனளிக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. தற்போது இருக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதால், சாமனிய மனிதர் ஒருவர் வாழக்கூடிய ஆயுட்காலம் வரையில் எய்ட்ஸ் நோயாளிகளும் வாழலாம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“