'ஸ்க்ரப் டைஃபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு 'ஸ்க்ரப் டைஃபஸ்' நோய் ஏற்படுகிறது. ஸ்க்ரப் டைஃபஸ் ஒருவகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும்.
சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்க்ரப் டைஃபஸ் நோய் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பாதிப்பு தொடர்ந்து வந்தது.
தற்போது இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, இருமல், நெறிக்கட்டிக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
காய்ச்சலைத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒட்டுண்ணி கடிப்பது மற்றும் ஒட்டுண்ணி கடியால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு நாய், பூனை மனிதர்களை தாக்குவதால் அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.