பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் (AD) அலுவலகத்தில் நேற்று (அக்.30) கிரானைட் கல் குவாரி ஏலம் நடைபெற்றது. குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
இதையொட்டி நேற்று ஒரு பிரிவினர் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்த நிலையில் மற்றொரு பிரிவினர் அவர்களை விண்ணப்பிக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அடிதடியில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியர் கற்பகம் அடிதடி சத்தம் கேட்டு ஏ.டி அலுவலகத்திற்கு வந்தார். தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்த ஆட்சியர் அவர்களை உடனடியே வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
மேலும், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நேற்று மாலை வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கல் குவாரி ஏலம் இன்று(அக்.31) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“