சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் காவல்துறை திட்டமிட்டு அராஜக தாக்குதலை நடத்தியது. பெண்கள் மீதும் வன்முறையை ஏவியது.
போராட்டக்காரர்களை தரதரவென இழுத்துச் சென்று வாகனத்திலும் வைத்து கண்மூடித்தனமாக காவல்துறை தாக்குதலை நடத்தியது. தக்குதலில் பலர் ரத்தக்காயம் அடைந்தனர். காயத்துக்கு சிகிச்சை பெறக்கூட அனுமதி மறுக்கப்பட்டனர். அது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் உலகம் பார்க்க சமூக வலைதளங்களில் உள்ளன.
இந்த சூழலில் காவல்துறையின் அடக்குமுறையை நியாயப்படுத்தியும், போராட்டக்காரர்களின் நோக்கங்களை கொச்சைப்படுத்தும் விதத்திலும் தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் உண்மைக்குப் புறம்பான தவறான தகவலை தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிக்கை கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, போராட்டத்துக்கு சம்மந்தம் இல்லாத இறந்துபோன ஒருவரை வைத்து அரசியல் நடத்தினார்கள் என்ற தவறான தகவலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் என்பது காவல்துறையின் தடியடியையும், பெண்கள் மீதான தாக்குதலையும் கண்டித்துதானே தவிர இறந்துபோன ஒருவரை முன்னிலைப்படுத்தி அல்ல. ஆகவே, முதல்வரின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
அமைதி வழியில் போராடிய மக்களின் மீது வன்முறையை ஏவிய காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் முதல்வரின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. முதல்வரின் அறிக்கையானது தமிழக அரசு போராட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் என்ற வாக்குறுதிக்கு முரணானதாக உள்ளது.
ஆகவே, வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்து நீதி விசாரணை மேற்கொண்டு, தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
அதோடு, சி.ஏ.ஏ சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக அளித்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளதையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டிப்பதோடு, தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.