கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாக முற்றுகையில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கோவையில் மூன்று முக்கிய வணிக வளாகங்களில் இன்று திரையிடப்பட்டது.
Advertisment
இந்த திரைப்படத்திற்கு பல்வேறு இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள புரூக் பீல்ட்ஸ் மால் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 150"க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். வணிக வளாகம் முன்பு திரைப்படத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறே பேரணியாக வந்த போராட்ட குழுவினர் ஒரு கட்டத்தில் தடுப்புகளை மீறி முற்பட்டனர்.
கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்
அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் வணிக வளாகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“