பழமையான மதரசாவை இடித்து அகற்றிய உத்தரக்காண்ட் மாநில பா.ஜ.க அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரக்காண்ட் மாநிலம் அத்வானி பகுதியில் உள்ள பழமையான மதரசாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம் மாநில அரசு இடித்து அகற்றியது. இந்த நிலையில் மதரசாவை இடித்து அகற்றிய பா.ஜ.க அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரக்காண்ட் பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழில் பிரிவு மாநில செயலாளர் ரவுப் நிஸ்தார் பேசும் போது: “உத்தரக்காண்ட் அத்துவானி பகுதியில் 125 ஆண்டுகள் பழையான மதரசாவை அரசு அதிகாரிகளுடன் இடித்து அகற்றியுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் 2024 தேர்தலை குறிவைத்து சிறுபான்மையினர் வரலாறுகளை அழிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். கலவரத்தை தூண்டும் வகையிலேயே மதரசாவை இடித்துள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட கலவரங்களை பா.ஜ.க அரசு ஏற்படுத்தியுள்ளனர். இதை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“