சென்னையில் பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இது விவாதத்திற்கு உள்ளானது.
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே மார்ச் 16-ம் தேதி ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது ஜார்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், ‘ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய இந்திய அரசமைப்பின் விழுமியங்களைப் போற்றி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் தனித்தும், பிற ஜனநாயக அரசியல் இயக்கங்கள், கட்சிகளோடு இணைந்தும் அறப் போராட்டங்களிலும் ஆக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் மீது போலியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எந்த ஒரு முகாந்திரமும் இன்றி, ஆங்கிலேய காலத்து கிரிமினல் திருத்த சட்டம் 1908 என்ற சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு தடை செய்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. அரசாங்கம் அமைந்ததில் இருந்து ஜனநாயக சக்திகளுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு இந்த தடையை விதித்துள்ளது. இந்த தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.’ என கூறினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன், பி.வெற்றிவேல், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் முனவ்வர் பாஷா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிந்திரநாத், திராவிட கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சி-தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக நீதி இயக்க தலைவர் பேராயர்.எஸ்றா சற்குணம், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கே.ஜலாலுதீன், மனித நேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரஷீத், வெல்ஃபேர் பார்ட்டி மாநில துணைத் தலைவர் முஹம்மது ஹாலித்,
கிருஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பசீர் அகமது, தமிழ் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீஃப், பி.யு.சி.எல். தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி, பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இந்திய தேசிய லீக் கட்சி செயல் தலைவர் எஸ்.கே.அத்தாவுல்லா, ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மௌலவி. வி.மன்சூர் காஷிபி, என்.சி.ஹெ.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ்,
முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா முஸாஃபர், முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மது அலி, ஏ.கே.முஹம்மது ஹனீஃபா, இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.செந்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தமிழர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தர மூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஆவல் கணேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நியாயமற்றது. ஆகவே, ஜார்க்கண்ட் மாநில அரசும், மத்திய அரசும் சிறுபான்மை விரோதபோக்கை கைவிட்டு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும், பொய் புகார்களின் அடைப்படையில் சிறையிலடைக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக, பாஜக தவிர அத்தனை எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மட்டும் கலந்து கொள்ளாதது விவாதங்களை கிளப்பியது. இது குறித்து திமுக தரப்பில் கேட்டபோது, ‘கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் திமுக.வுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. செயல்படவில்லை. தவிர, பாப்புலர் ஃப்ரண்ட் குறித்தும் பாசிட்டிவான ஒரு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை’ என்றார்கள்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டிடிவி தினகரன் தனது பிரதிநிதிகளை அனுப்பி எதிர்க்கட்சிகளுடன் உறவு பேண ஆரம்பித்திருப்பதையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டு பேசிக்கொண்டனர். இந்தக் கட்சிகளில் திமுக எதையெல்லாம் அணி சேர்க்க தவறுகிறதோ, அந்தக் கட்சிகள் எல்லாம் டிடிவி தினகரனுடன் அணி சேரும் வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.