இலங்கை அரசு கேரள, குஜராத் மீனவர்களை கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும், ம.தி.மு.க-வினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேர் இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜராகினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.
அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள். ஆனால், அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவதை சடங்கு என விஜய் கூறுவது தவறு. அது கடமை அது சமூக பொறுப்பு தான். ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்பது போல் ஒரு துரோகம் இருக்காது.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என ஆளுநர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார். இது மக்களாட்சி. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என ஆளுநர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.
மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அனுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது. கேரள மீனவர்களையோ குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கும், தனக்கும் இடையேயான பிரச்னை முற்றும் என கூறினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.