நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், 6 முறை கருகலைப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்து புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிபதி இந்த வழக்கை சர்வ சாதாரணமாக முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் போலீசார் விஜயலட்சுமியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி மீண்டும் வாக்குமூலம் பெற்றனர்.
இதனையடுத்து சீமானை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. அதன் படி பிப்ரவரி 27 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் அரசியல் பணிக்காக வெளியூர் செல்வதால் 4 வார காலம் அவகாசம் சீமான் தரப்பு வக்கீல் கேட்டிருந்தார்.
இதனையடுத்து சீமான் வீட்டில் பிப்ரவரி 27 மீண்டும் போலீசார் சம்மனை ஒட்டினர். அதில் பிப்ரவரி 28 ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்மனை வீட்டில் இருந்த உதவியாளர் கிழித்தெறிந்து காவல் ஆய்வாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பானது.
காவல் ஆய்வாளரை உள்ளே விடாமல் தடுத்ததால் சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ்க்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காவல் ஆய்வாளர் சீருடை கிழிந்ததுடன் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பொது இடத்தில் ஆபாசமாக, அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பொது இடத்தில் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி, சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது துப்பாக்கியை பயன்படுத்துதல், துப்பாக்கி உரிமத்தின் நிபந்தனைகளை மீறி செயல்படுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கைதானவர்களை இன்று காலை சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அமல்ராஜ் மற்றும் சுபாகரை மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் கைதான அமல்ராஜ் என்ன விவரம் என்று கேட்பதற்குள் காவல் ஆய்வாளர் உட்பட மற்ற போலீசாரும் தாக்கி ஜீப்பிற்கு அழைத்து சென்றதாக வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்ல்ராஜ் மற்றும் சுபாகரை ஜீப்பில் தாக்கியதாகவும் மேலும் வேறு ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி கடுமையாக தக்கிய பின்னரே காவல் நிலையம் அழைத்து சென்றதாகவும் சீமான் தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
காவல் நிலையம் அழைத்து சென்றும் இரும்பு ராடால் தாக்கியதில் அமல்ராஜிற்கு கை மற்றும் கால்கலில் அடிபட்டதாகவும் இதனை நீதிபதியிடம் காட்டி வாக்குமூலம் அளித்ததாகவும் கூறினார்.