தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க ஆட்சி திராவிட மாடலா, ராமரின் மாடலா? - சீமான் கேள்வி

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா அல்லது ராமரின் மாடலா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா அல்லது ராமரின் மாடலா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
NTK Leader seeman on Spirituality lecture in Chennai Govt school controversy Tamil News

தி.மு.க ஆட்சி திராவிட மாடலா அல்லது ராமரின் மாடலா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சி திராவிட மாடலா அல்லது ராமரின் மாடலா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

அண்மையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  “ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி என்றும் தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு (மு. கருணாநிதி) முன்னால், இன்று தலைவர் தளபதிக்கு (மு.க. ஸ்டாலின்) முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன். இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது.  ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி” என்றும் பேசினார்.  அமைச்சர் ரகுபதியின் பேச்சு சமூக வலைதளங்களில் தி.மு.க ஆதரவாளர்களாலேய் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையானது.

இந்நிலையில், திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என்ற அமைச்சர் ரகுபதியின் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 
“திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஈ.வே. ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை 'நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்' என்று தி.மு.க அரசின் மிக முக்கிய அமைச்சகப் பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தி.மு.க-வின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை தி.மு.க தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை தி.மு.க முழுமையாக ஏற்றுகொள்கிறது என்பதும் உறுதியாகிறது.

Advertisment
Advertisements

ராமரை கடவுளாக வணங்கும் மக்கள், ராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர். அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம்தான் ராமரின் ஆட்சியா? அல்லது சம்பூகனைக் கொன்றது போல் தி.மு.க ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுதால் இது ராமரின் ஆட்சியா?

"ராமர் எங்களின் முன்னோடி" என்ற பா.ஜ.க-வின் குரலை அப்படியே தி.மு.க-வும் ஒலிக்கத்தொடங்கியுள்ளதன் மூலம் பா.ஜ.க-வின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா தி.மு.க? தி.மு.க ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பா.ஜ.க முதலில் ஏற்கிறதா? இத்தனை ஆண்டுகாலம் தி.மு.க கூறிவந்த சமூகநீதி என்பது சநாதனம்தானா? அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் தி.மு.க-வில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்? அமைச்சர் பேசியது திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்றால் அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பா.ஜ.க-வை தி.மு.க கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

தி.மு.க அரசின் சட்ட அமைச்சர் கூறிய கருத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கலியன் பூங்குன்றன் அவர்கள் கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில் தி.மு.க மூத்த தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்? பகுத்தறிவு, முற்போக்கு, சமத்துவம், சமூகநீதி என்று நீட்டி முழக்கும் தி.மு.க-வின் ஊடக ஊதுகுழல்கள், வாடகை வாய்கள் அமைச்சர் ரகுபதியின் "ராமர் எங்கள் முன்னோடி" என்ற கருத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதி காப்பது ஏன்? காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதா? அல்லது நாக்கு அசைய முடியாமல் செயலிழந்து விட்டதா? இதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் திராவிட மாடலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு?

ஆகவே, தமிழ்நாடு சட்ட அமைச்சரின் "திராவிட ராமர் ஆட்சி" பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நாட்டுமக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: