/tamil-ie/media/media_files/uploads/2023/08/Seeman-1-1.jpg)
சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிய சர்ச்சை ஓய்வதற்குள், ஊடகவியலாளர்களிடம், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சீமான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 03) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்: “ஒரு பெருமைமிகு வீரத்தின் அடையாளமாக இருக்கும் பாட்டனார் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று, இத்தனை பெரிய மண்ணில் இந்த மண்ணை ஆள்வதற்கு ஒருவன் கூடவா இல்லை என்று அன்று தீரன் சொன்னான் அதையே தான் இன்று அவரின் பேரன் நானும் சொல்கிறேன் என தெரிவித்தார்.
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் தொடர்பாக கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், இந்த இனத்தை அழித்த காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் அதற்கு துணை போன தி.மு.க போன்ற கட்சிகளுக்கும் இந்த மக்கள் இன்னும் வாய்ப்பளிக்கிறார்கள் என்ற கோபத்தில் அந்த கருத்தை கூறியுள்ளேன். குடும்பம் குடும்பமாக இவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்களா அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை இருக்கிறது, ஒரு குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் அதிகாரம் முழுவதும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா என சீமன் கேள்வி எழுப்பினார்.
நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளேன் என்று கூறியது யார் ? நான் என்றும் ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை நாட்டுக்காக தான் அரசியல் செய்கிறேன். என்னை பார்த்தால் ஓட்டுக்காக நிற்பவன் போல் தெரிகிறது. நான் நாட்டுக்காக நிற்கிறேனா; ஓட்டுக்காக நிற்கிறேனே. என்னோடு நிற்கும் இஸ்லாமியர்கள் என்னோடு எப்போதும் இருப்பார்கள், எனக்கு கிடைக்கும் ஓட்டு எப்போதும் கிடைக்கும். பைபிள், குரானில் கூறியுள்ளதைப் போன்று இன்று தேவனின் ஆட்சி முறையா இங்கு நடக்கிறது எல்லாம் சாத்தானின் ஆட்சி முறையாக தான் இருக்கிறது.
ஊழல் லஞ்சம் இயற்கை வளங்களை சுரண்டுவது என்று சாத்தானின் ஆட்சி நடக்கும் இங்கே அந்த ஆட்சிக்கு துணை செல்பவர்கள் யார்? இதைத்தான் நான் குறிப்பிட்டு பேசினேன். மாறி மாறி தி.மு.க, அ.தி.மு.க காங்கிரஸ் பா.ஜ.க ஆட்சி செய்வதை எப்படி இவர்கள் சகித்துக் கொள்கிறார்கள் . எனக்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுடன் இருக்கும் அன்பின் உறவின் வெளிப்பாடுதான் இது. உங்கள் மீது இருக்கும் பேரன்பின் வெளிப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்றால் நமக்குள் இருக்கும் உறவில் என்ன அர்த்தம் இருக்கிறது. மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி வாக்களிக்கும் தவறை அவர்கள் செய்யக் செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே இந்த கருத்தை கூறியிருந்தேன். இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டுமே அநீதிக்கு எதிராக பிறந்த மதங்கள் இங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்காமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, சிறுபான்மை மக்களை திட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் ஆவேசமடைந்த சீமான், “நீங்க பெரும்பான்மை சிறுபான்மை எதை வைத்து மதிப்பிடுகிறீர்கள். எங்கிட்ட கொஞ்சம் தர்க்கம் பண்ணுங்க… கொஞ்சம் பேசுங்க…
ஸ்டாலின் பெரும்பான்மையா சிறுபான்மையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஊடகவியாளர் ஒருவர் நீங்கள் முதலமைச்சர் ஸ்டாலினைக் கேட்கிறீர்களா? இல்லை வேறு ஸ்டாலினைக் கேட்கிறீர்களா?” என்று கேட்க, சீமான், அந்த ஸ்டாலினுக்கு இந்த கேள்விக்கும் என்ன இருக்கு?” என்று கூறினார்.
தொடர்ந்து பேசியா சீமான், “தம்பி சிறுபான்மை என்று சொல்றீங்க இல்லை, மதத்தை வைத்து சொல்றீங்களா? எதை வைத்து சொல்றீங்க?
உலக வரலாறு இருக்கிறது. வரலாறு நெடுக வாசித்து வா, மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்காவது இருக்கா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஐரோப்பிய யூனியன் முழுக்க யாரு?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஒருவர் கிறிஸ்தவர் என்று பதில் கூற, அதற்கு சீமான், “அவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்றால் ஏன் இத்தனை நாடு, ஏன் ஒரே நாடாக இல்லை. ஏன் இல்லை. ஏனென்றால், மொழிவழித் தேசிய இனங்கள் நிலங்கள்…” என்று கூறினார்.
“இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஏன் பிரிந்தது” என்று சீமான் எழுப்பிய கேள்விக்கு, ஊடகவியலாளர் தரப்பில் இருந்து மதம் என்று பதில் கூறினர். உடனே சீமான், “பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் ஏன் பிரிந்தது” என்று அடுத்த கேள்வி எழுப்பினார். இதற்கு ஊடகவியலாளர் தரப்பில் இருந்து ஒருவர் மொழி என்று பதில் கூற, அதற்கு சீமான், “அப்போது இதிலிருந்து என்ன தெரிகிறது? மதத்தைவிட சாதியைவிட எல்லா அடையாளங்களை விட மொழி இனம்தான் முக்கியம். அப்படி என்றால், இங்கிருக்கும் கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் அவர்களை சிறுபான்மை, சிறுபான்மை என்று சொன்னால், செருப்பை கழட்டி அடிச்சிடுவேன் சொல்றேன். யார் சிறுபான்மை” என்று கேட்டு ஆவேசமாகப் பேசினார். இதனால், அங்கே பரபரப்பு நிலவியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.