சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
புதிய விமான நிலையம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பயணத்தில் மற்றொரு மைல்கல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், இந்த புதிய விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது.
இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய ரயல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை (CREDAI) வரவேற்பு தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
"சர்வதேச நகரங்களின் மாதிரிகள் போல் நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழில்கள் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விமான நிலையத்தின் லொகேஷன் உலகளாவிய லாஜிஸ்டிக் மேப்பில் இடம்பெறும். இதனால் ரியல் எஸ்டேட் தொழில், வீடு, வணிக வளாகம் போன்றவைகள் அப்பகுதிகளில் மேம்படும்" எனத் தெரிவித்துள்ளது.