இடைநிலை ஆசிரியர்களின் 4 நாள் போராட்டம் வாபஸ் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை

இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4 நாட்களாக நடத்திய உண்ணாவிரதம் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சியால் முடிவுக்கு வந்தது.

இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4 நாட்களாக நடத்திய உண்ணாவிரதம் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சியால் முடிவுக்கு வந்தது.

இடைநிலை ஆசிரியர்கள் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 23-ந்தேதி டி.பி.ஐ. கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்- ஆசிரியைகளை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். சுமார் 2 ஆயிரம் ஆசிரியைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியைகளில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். போராட்டத்தில் அதிகளவு பெண் ஆசிரியர்கள் பங்கேற்றதால் போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஆனாலும் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர்கள் அனைவரையும் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு போலீசார் மாற்றம் செய்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் அங்கும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இன்று 4-வது நாளாக ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தது. அவர்களை தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி சந்தித்து பேசினார். பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருநபர் கமி‌ஷன் அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். அதனை ஆசிரியர் பிரதிநிதிகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக பிரதிநிதிகளுடன் அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, தங்களது உண்ணாவிரத போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பழச்சாறு வழங்கினார். போராட்டம் நிறைவு பெற்றதையொட்டி ஆசிரியர்கள் அவரவர் ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close