தமிழகம் முழுவதும் ஏர்செல் அலுவலகங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏர்செல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், 20 நாட்களாக பொதுமக்களும், வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் விஷமிகளும் தங்கள் நிறுவன அலுவலகங்களின் முன்பு கூடி பெண் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறையிலும் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையரிடம் பிப்ரவரி 21, 28, மார்ச் 5, 6 தேதிகளில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், ஊழியர்கள் வேலைக்கு வர மறுப்பதால் ஏர்செல் நிறுவனம் முடங்கும் அபாயம் உள்ளதால், அனைத்து அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் பொது அதிகாரம் பெற்ற பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அனைத்து கமிஷனர்களுக்கும், எஸ்.பி.-க்களுக்கும் ஏர்செல் அலுவலக பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒரு காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறை தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்டு வழக்கை மார்ச் 21 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.