Advertisment

எட்டப்பன் அரசு என விமர்சித்ததால் டிடிவி மீது தேசத் துரோக வழக்கு : நீதிமன்றத்தில் போலீஸ் பதில் மனு

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததால் டி.டி.வி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சேலம் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, chennai high court, aiadmk, ttv dhinakaran, vk sasikala, sedition charge against ttv dhinakaran

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததால் தான் டி.டி.வி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சேலம் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisment

மத்திய, மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க ( அம்மா) அணிச் செயலாளர்

புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் மீது சேலம் அன்னதானபட்டி காவல்துறையினர் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக புகழேந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட பலரின் படங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம் பெற்றது தனக்கு தெரியாது எனவும், அதை யார் அச்சிட்டார்கள் என்ற விவரமும் தெரியாது என மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் அண்ணதானப்பட்டி ஆய்வாளர் குமார் பதில் மனு தாக்கல் செய்தார் அதில், (அதிமுக புரட்சித் தலைவி அம்மா) கிளை செயலாளர் சரவணன் என்பவர் அளித்த புகாரில், டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 20 பேர் கொலையாளிகளின் ஆட்சி தொடரலாமா, காவிக்கு துணைக்கு போகும் எட்டப்பன் அரசு, படிக்க எண்ணியவரை பாடையில் ஏற்றிய பாரத பாவிகளே என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

உச்சநீதிமன்ற உத்தரவினை மீறி மக்களை போராட தூண்டும் உள்நோக்கத்துடன் இந்த துண்டு பிரசுரத்தில் வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசை எட்டப்பன் அரசு என கூறுவது சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, டிடிவி தினகரனின் உத்தரவின் பேரில் தான் இது போன்ற நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது என கலைவாணி என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 17 பேர் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 8 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் நடந்த போது, வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி என்பவர் போராட்டங்களை முறைபடுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராடுவது அடிப்படை உரிமை என்றாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது வகையிலும் போராட்டங்கள் நடைபெற்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் என உத்தரவிட்டனர்.

இந்த புகாரில் சம்மந்தப்பட்டவர்கள் சட்டம் ஒழுங்கை மீற வேண்டும் என போராட்டகாரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படகூடாது என்பதற்காக புகழேந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் எதிராக தரகுறைவாகவும் அவதூறாகவும் பேசும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கபட்டுள்ளது. அதில், இடம்பெற்ற வாசகங்கள் குறித்து டிடிவி தினகரன், புகழேந்தி நன்கு அறிவார்கள். உரிய ஆதாரங்களுடன் தான் சரவணன் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞரின் பரிசீலனைக்கு பிறகு தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலத்தை கைது செய்து விசாரித்த போது டிடிவி தினகரன், எஸ்.கே. செல்வம் உள்ளிட்ட பலரின் கூட்டு சதி செய்திருப்பது நிருபனமானது.

விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதன் முடிவு எப்படி வரும் என காத்திருக்காமல் அவசரகதியிலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே புகழேந்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார். துண்டு பிரசுரம் அடிக்கப்பட்ட விவகாரத்தில் புகழேந்தி பங்கு இருப்பதால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் வாதிட உள்ளார் என தெரிவித்தார்.

புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு பதிவு செய்த போலீஸ் வழக்கு விசாரணைக்கு தயங்குகின்றது. அவர்கள் இதனை காலதாமதம் செய்யவே நினைக்கின்றனர். இது பேன்ற வழக்குகளில் கூட தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என கூறி வழக்கை தள்ளிவைக்க கோருவதில் இருந்தே இந்த வழக்கின் பலவீனத்தையும், அரசின் பலவீனத்தையும் அறிய முடிகின்றது என தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ரமேஷ், அவதூறான கருத்துகள், வார்த்தைகள் துண்டுப் பிரசுரங்களில் உள்ளது என்ற போலீஸாரின் வாதம் போல் அவதூறான கருத்துகள் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை என கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (27-ம் தேதி) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Chennai High Court Ttv Dhinakaran Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment