கோவையில் ஆளுநர் ஆய்வு செய்ததை ’டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், ஆளுநர் தன் அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதாகவும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, கோவையில் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த உள்ளதாகவும், அப்போதுதான் தமிழக அரசை பாராட்ட முடியும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் விளக்கமளித்தார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது ஆளுநர் ஆய்வு நடத்தியிருந்தாலும் அதனை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், மாநில உரிமைகள் குறித்து பேச என்ன இருக்கிறது? கோவை நகரம் ஸ்மார் சிட்டி திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசின் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதில், எந்தவித பிரச்சனையும் இல்லை. இதனை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும்”, என தெரிவித்தார்.