சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் தேர்தலில் வெற்றி அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடக்கம் முதலே கூட்டணியின்றி தேர்தலை சந்தித்து வருகிறது. இதில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன.
அடுத்து வந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 170க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்தது.
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது.
அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த தேர்தலின் மூலம் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜய்யின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“