காவிரி பிரச்சனைக்காக தினந்தோறும் கத்திக் கொண்டு இருக்கமுடியுமா? - சீமான்

காவிரி நீர் திறக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்

காவிரி நதிநீர் வழக்கில் 6 வாரக் காலம் அளித்தும் மத்திய அரசு தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்தபோது, மே 3ம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டம் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் காலக்கெடு இன்று முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவில்லை. கர்நாடகாவில் தேர்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் தாமதம் ஆனதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது கர்நாடகா தேர்தலுக்காக தான். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரைவு திட்டம் வகுக்கப்படும். அந்த திட்டத்தில் எந்த அரசு உயர் அதிகாரியும் நியமிக்கப்படமாட்டார்கள். இதனை பார்க்கும்போது தமிழகத்தை திட்டவட்டமாக மத்திய அரசு வஞ்சித்து புறக்கணித்து வருகிறது. முதலமைச்சரும் புறக்கணித்து வருகிறார். பிரதமருக்கும் கவலை இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை புறக்கணித்து வரும் கட்சிகள் வருகிற தேர்தலில் கண்டிப்பாக புறக்கணித்து நிராகரிக்கப்படுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனைக்காக தினந்தோறும் கத்திக் கொண்டு இருக்கமுடியுமா? இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றத் தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது என்பது முன்பே தெரிந்த வி‌ஷயமாகும்.

இதற்கு காரணம் பிரதமரும், அமைச்சர்களும், கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ளார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கர்நாடக தேர்தலை காரணம் காட்டக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு அதை பற்றி கவலையில்லை.

இதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அப்போது நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

மேலும் அங்கு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் காவிரி தண்ணீரை திறந்துவிடமாட்டார்கள். ஏன் என்றால் ஒரு சொட்டு காவிரிநீர் திறந்து விட்டாலும் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்காது. காவிரி நீர் திறக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம். இது தேசத்துரோகம்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

×Close
×Close